×

பனை மரங்களில் பதநீர் வரத்துக் குறைவால் பனங்கற்கண்டு உற்பத்தி கடும் பாதிப்பு: ராமநாதபுரம் விவசாயிகள் கவலை

* தேவை அதிகரிப்பால் விலை உயர்வு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை குறைவால், பனை மரங்களில் பதநீர் வரத்து குறைந்து, பனங்கற்கண்டு உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. இதனால், பனை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பனைமரங்கள் வளர்ப்பும், அதனை சார்ந்த தொழிகளும், வேளாண்மை தொழில்களும் முக்கிய தொழில்களாக உள்ளன. இந்த தொழிலில் சுமார் 2 லட்சம் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாவட்டத்தில் கன்னிராஜபுரம், நரிப்பையூர், காவாக்குளம் முதல் சிக்கல் வரை உள்ள சாயல்குடி பகுதிகள், திருப்புல்லானி, ரெகுநாதபுரம், தாமரைகுளம் உள்ளிட்ட ராமநாதபுரம் பகுதிகள், ராமேஸ்வரம் தீவுப் பகுதிகள் மற்றும் தொண்டி வரை உள்ள மாவட்டத்தின் பரவலான பகுதிகளில் பனை மரங்கள் அதிகளவில் உள்ளன.

வழக்கமாக வடகிழக்கு பருவமழை பெய்து, நெல் அறுவடை செய்யும் தை மாதத்தில் முதல் வேலையாக கருப்பட்டி தயாரிப்பிற்காக, பனைமர பதநீர்க்காக பாளைகளை வெட்டி விடுவர். ஆனால், கடந்த 2019க்கு முந்தைய 5 ஆண்டுகளில் கடும் வறட்சியால் சீசன் மாறி, பனை சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டன. இதனால், ஆயிரக்கணக்கான மரங்கள் பட்டுப்போய், மரச்சாமன் தயாரிக்க வெட்டப்பட்டன. அதன்பின் கடந்த 2020-21 ஆண்டுகளில் பருவமழை நன்றாக பெய்து, சீசன் நேரத்தில் பனை மரத்தில் பதநீர் உற்பத்தி அதிகரித்தது.

கடந்தாண்டு பாதியாக குறைந்த பருவமழை
வடகிழக்கு பருவமழை காலங்களில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அதிக மழை கிடைக்கும். ஆனால், கடந்தாண்டு செப்டம்பர் கடைசியில் தொடங்க வேண்டிய பருவமழை, அக்.29ம் தேதி துவங்கியது. டிச.31 வரை 444.80 மி.மீ மழை மட்டுமே பதிவானது. இது மாவட்டத்தின் சராசரி மழை அளவான 827 மி.மீட்டரில் பாதி அளவாகும். இதனால், மாவட்டத்தில் நெல், மிளகாய் உள்ளிட்ட சாகுபடியும், பனை மற்றும் பனை சார்ந்த தொழில்களும் பாதிக்கப்பட்டன. மேலும், ஜூன், ஜூலை மாதங்களில் கேரளா மாநிலத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை துவங்கும். அப்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து வீசும் குளிர்ந்த காற்றின் ஈரப்பதத்தால், ராமநாதபுரம் மாவட்ட பனை மரங்களில் சுவையான பதநீர் கிடைக்கும். ஆனால், நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையும் குறைந்ததால், பதனீர் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், இந்தாண்டு பனங்கற்கண்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பனைமர விவசாயிகள் கூறுகின்றனர்.

மருத்துவக் குணம் உடையது
இது குறித்து சாயல்குடி பனை விவசாயிகள் கூறுகையில், ‘குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் விரும்பி வாங்குவது பனங்கற்கண்டு. மருத்துவக்குணம் வாய்ந்த இந்த பொருளை பால், டீ, காப்பி, சுக்கு காப்பியில் கலந்து குடிக்கலாம். குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் பனங்கற்கண்டை விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் உணவுப் பொருட்கள், மிட்டாய்கள், சாக்லெட், சாஸ் உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொருள் தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனால், தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலும் பனங்கற்கண்டுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன் தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆடி, ஆவணி மற்றும் புரட்டாசி மாதங்களில் மட்டுமே பனங்கற்கண்டு தயாரிப்புக்கு உகந்த பதநீர் கிடைக்கும்.

இந்த மாதங்களில் மேற்கு தொடர்ச்சி மலை காற்று சீசன் என்பதால் கூடுதலான சுவையான பதநீர் கிடைக்கும். ஆனால், கடந்த மாதம் குறைந்த அளவு பதநீர் மட்டுமே கிடைத்துள்ளதால், பனங்கற்கண்டு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. சளி, இருமலுக்கு சிறந்த மருத்துவப் பொருளாக விளங்குவதால், கொரோனா காலத்தில் சிறிய கருப்பட்டியும் பனங்கற்கண்டும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. இதனால், தற்போது வெளிநாடுகளிலும் அதிக வரவேற்பு உள்ளது. கடந்த மாதம் குறைந்த அளவு பதநீர் மட்டுமே கிடைத்துள்ளதால், பனங்கற்கண்டு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. சளி, இருமலுக்கு சிறந்த மருத்துவப் பொருளாக விளங்குவதால், கொரோனா காலத்தில் சிறிய கருப்பட்டியும் பனங்கற்கண்டும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.

சுவையான பனங்கற்கண்டு தயாராகும் முறை
பனங்கற்கண்டை தயாரிக்க பதநீரை அண்டாவில் சுண்டக் காய்ச்சி, அதிலிருந்து வரும் பாகுவை பதப்படுத்தி, மண்பானை மற்றும் தகர டிரம்களில் ஊற்றி, காற்று செல்லாத அளவிற்கு மண்ணில் புதைப்பர். அதன்பின் 41 நாட்கள் கழித்து வெளியே எடுப்பர். பின்னர் டிரம்மிலிருந்து பாகுவை பிரித்து சுத்தப்படுத்தி, தண்ணீரை கொண்டு கழுவி வெயிலில் உலர வைத்து, பனங்கற்கண்டு தயாரிப்பர். இவ்வாறு தயாரிக்கப்படும் பனங்கற்கண்டு டைமன்ட் கற்கண்டு, தூள் கற்கண்டு, பவுடர் கற்கண்டு என 3 வகையாக பிரிப்பர். தூள் கற்கண்டு ஒரு கிலோ ரூ.800 முதல் விற்கப்படும் இதர வகைகள் ரூ.1,200 முதல் விற்கப்படும். சில்லரை வியாபாரிகள், சூப்பர் மார்க்கெட் ஆகிய வணிக நிறுவனங்களுக்கு வாடிக்கையாக விற்பனைக்கு அனுப்புவர். மேலும், மதுரை, கீழக்கரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட நகர பகுதி வியாபாரிகள் வாங்கிச் சென்று அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

டபுள் ஆனது பனங்கருப்பட்டி விலை
கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை குறைவால், பனை மரங்களில் இருந்து பதநீர் வரத்தும் குறைந்துள்ளது. இதனால், பனங்கருப்பட்டி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வரை தரத்திற்கேற்றவாறு ஒரு கிலோ ரூ.150 முதல் 180 வரை விற்கப்பட்டது. தற்போது கிலோ ரூ.300க்கு விற்பனையாகிறது. எனவே, அதிகமாக உற்பத்தி செய்யும் காலங்களில் பாதுகாக்க பதனிடும் கூடங்கள் அமைக்க வேண்டும். ரேஷன் கடைகளில் கட்டாய பொருளாக விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பனை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பனை மரங்களில் பதநீர் வரத்துக் குறைவால் பனங்கற்கண்டு உற்பத்தி கடும் பாதிப்பு: ராமநாதபுரம் விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,
× RELATED பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார்...